திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், பார்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு மற்றும் சட்டவிரோத பார்கள் இயக்கம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தனக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காகவே தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, இந்த முறைகேட்டில் அரசுக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பீடு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், ஆரம்பக்கட்ட ஆதாரங்கள் உள்ளதால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்தை ஏற்று முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியைக் கைது செய்யக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
