“விஜய்க்கு 1 வயசு இருக்கும்போது என்ன நடந்துச்சு தெரியுமா?”…. மிசா விவகாரத்தில் திருச்சி சிவா உடைத்த ரகசியம்…. பற்றி எரியும் அரசியல் களம்….!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஜனநாயக உரிமைகளும் பத்திரிகைச் சுதந்திரமும் கடுமையாக முடக்கப்பட்டன. அந்த இக்கட்டான காலகட்டத்தில், காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோதிலும், எமர்ஜென்சியைத் துணிச்சலாக எதிர்த்த ஒரே மாநிலக் தலைவராக மு. கருணாநிதி திகழ்ந்தார். மெரினா கடற்கரையில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடத்தி எமர்ஜென்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதால், 1976 ஜனவரி 31 அன்று திமுக அரசு கலைக்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பின்னணியில், தவெக தலைவர் விஜய்க்கு ஒரு வயதாக இருந்தபோதே மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின்க கீழ் கைது செய்யப்பட்டார் என்று திமுக எம்பி திருச்சி சிவா ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

1976 பிப்ரவரி 1 அன்று திமுக அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முக்கியத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மிசா சட்டத்தின் கீழ் வரிசையாகக் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலினைக் கைது செய்யக் காவல் துறையினர் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றபோது, அவர் வெளியூரில் இருந்தார். அவர் ஊர் திரும்பியதும் முறைப்படி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஸ்டாலினுக்கு 23 வயது மட்டுமே நிரம்பியிருந்ததுடன், புதிதாகத் திருமணமும் ஆகியிருந்தது. இது தொடர்பாக அனைத்து புகைப்படச் சான்றுகளும், வரலாற்று ஆவணங்களும் தெளிவாக இருப்பதாகத் திருச்சி சிவா சுட்டிக்காட்டியுள்ளார்.

   

சிறைவாசத்தின் போது மிசா கைதிகள் கடுமையான சித்திரவதைகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். சிறையில் ஸ்டாலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தடுத்து, அவரைக் காப்பாற்ற முயன்ற மேயர் சிட்டிபாபு படுகாயமடைந்து, பின்னாளில் உயிரிழந்தார். இந்தச் சோகமான நிகழ்வுகள் அனைத்தையும் சிட்டிபாபு தனது நாட்குறிப்பில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். திருச்சி சிவாவும் தனது கல்லூரிப் பருவத்தில் மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

   

தவெக நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஸ்டாலின் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி வரும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் வரலாற்று உண்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருச்சி சிவா. எமர்ஜென்சி காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு முற்றிலும் வேறுபட்டு ஜனநாயகத்திற்கான குரலாகத் திகழ்ந்ததற்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் துணிச்சலான முடிவுகளே காரணம் என்றும், இத்தகைய மிசா சிறைவாசம் என்பது திமுகவின் வரலாற்றில் மறக்க முடியாத மிகப்பெரிய தியாகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.