“எதுக்கும் அஞ்சமாட்டேன்.. இனிமேதான் என் ஆட்டம்”… திண்டுக்கல் லியோனி நள்ளிரவில் வெளியிட்ட வீடியோ… திருச்சியில் பரபரப்பு…!

By Nanthini on சித்திரை 20, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ. லியோனி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு கீழப்புதூர் பகுதியில் அவர் வேனில் நின்றபடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவர் மீது காலி மது பாட்டிலை வீசி தாக்குதல் நடத்த முயன்றார். அந்த பாட்டில் வேனில் பட்டு உடைந்து சிதறிய நிலையில், நல்வாய்ப்பாக லியோனி காயமின்றி உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள திண்டுக்கல் லியோனி, எதிர்க்கட்சிகளின் இந்த அநாகரிகச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார். கடந்த 16 நாட்களாக திமுகவிற்காகத் தான் மாநிலம் முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்து வருவதாகவும், தனது கருத்துகளை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தின் காரணமாகவே இத்தகைய கீழ்த்தரமான தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

   

மேலும், இது போன்ற மிரட்டல்களுக்கோ அல்லது சலசலப்புகளுக்கோ தாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன் என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். “நான் சார்ந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பணிந்த வரலாறு கிடையாது; இந்தச் சம்பவத்திற்குப் பிறகு எனது பிரச்சாரம் முன்பை விட அதிக வீரியத்துடனும், வேகத்துடனும் தொடரும்” என்று அவர் அந்த வீடியோவில் சவால் விடுத்துள்ளார். ஜனநாயக ரீதியாகத் தேர்தலை எதிர்கொள்ளத் துணிவில்லாதவர்கள் இதுபோன்ற வன்முறைகளைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

   

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய், அதிமுகவின் ராஜசேகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணசாமி எனப் பல முனைப் போட்டி நிலவும் சூழலில், லியோனி மீதான இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டிலை வீசிய நபர் யார் என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகள் குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுவது அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.