மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்காலிக அமைதி, ஹார்முஸ் நீரிணையில் நடந்த ஒரு அதிரடி ராணுவ நடவடிக்கையால் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. ஈரானின் ‘Touska’ என்ற பிரம்மாண்ட கண்டெய்னர் கப்பல், அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் சென்றதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் அதன் மீது தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியுள்ளன. மலேசியாவிலிருந்து ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலின் இன்ஜின் அறையை நோக்கி, அமெரிக்கப் போர்க்கப்பல் 13 செ.மீ MK 45 ரகத் துப்பாக்கியால் சுட்டு முடக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியதோடு, கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து தீவிர ஆய்வு நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்று ஈரான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது. ஒப்பந்தம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இந்த மோதல் போக்கு இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் இதற்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதால் சர்வதேச சமூகம் பெரும் கவலையில் உள்ளது.
கடல்வழிப் பாதையில் நிலவும் இந்தப் பதற்றம் வெறும் ராணுவ மோதலோடு நின்றுவிடாமல், உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘Everglades’ கப்பல் மீது ஈரான் எச்சரிக்கை குண்டுகளை வீசியிருந்தது. தற்போது அமெரிக்கா கப்பலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் நீரிணை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, எண்ணெய் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் இதன் தாக்கம் உடனடியாகப் பிரதிபலித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சற்று குறைந்திருந்த கச்சா எண்ணெய் விலை, திங்கட்கிழமை காலையிலேயே தடாலடியாக உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.65 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 95.49 டாலராக விற்பனையாகிறது. அதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 88.93 டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த ஈகோ மோதல் நீடித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச அளவில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொடும் என்றும், இது உலகளாவிய பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
