ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மானாய் கிராமத்தில், திருமணம் நடைபெறவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதான ஷோபா மற்றும் 23 வயதான விம்லா ஆகிய இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு வரை வீட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த சகோதரிகள் இருவரும் நள்ளிரவில் உறங்கச் சென்றனர். ஆனால், அதிகாலை 4 மணியளவில் இருவரது உடல்நிலையும் திடீரென மோசமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவர்களை உடனடியாக ஜோத்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், மணப்பெண்கள் இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், அவர்கள் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது குறித்த தற்கொலைக் கடிதம் ஏதும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.
ஒரே நாளில் மணக்கோலம் பூண வேண்டிய இரண்டு மகள்களும், சடலமாக மீட்கப்பட்டதைக் கண்டு அவர்களது பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். போலீஸார் இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
