உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 55 வயதான சந்தோஷ் சிங் சவுகான் என்பவர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனது மனைவிக்குப் புத்தாடை வாங்க ஸ்கூட்டரில் கடைக்குச் சென்றுள்ளார். துணிகளை வாங்கிக்கொண்டு தனது வீட்டை நெருங்க வெறும் 500 மீட்டரே இருந்த நிலையில், எதிரே இளம்பெண் ஒருவர் ஓட்டி வந்த சொகுசு ஜீப் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மிகக் கடுமையாக மோதியது.
ஸ்கூட்டர் மீது பலமாக மோதிய அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் ஜி.எஸ்.டி. அதிகாரியின் தோட்டத்திற்குள் புகுந்து நின்றது. விபத்தில் சந்தோஷ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஜீப்பில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண், உடனடியாக அங்கு வந்த மற்றொரு சொகுசு காரில் ஏறி அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
வாகனம் ஓட்டிய இளம்பெண் அப்போதுதான் புதிதாக ஜீப் ஓட்டுவதற்குக் கற்றுக்கொண்டு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. முறையான பயிற்சியோ அனுபவமோ இன்றி சாலையில் வாகனத்தை இயக்கியதே இந்தத் துயரத்திற்கு வழிவகுத்துள்ளது. தப்பியோடியவர்களைப் பிடிப்பதற்காகவும், விபத்தின் பின்னணி குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
