மும்பையில் நடைபெற்றுவரும் கணபதி ஆகமன் ஊர்வலங்களின் போது காட்சிப்படுத்தப்பட்ட புவி ஈர்ப்பு விசைக்கு சவால்விடும் வகையிலான பிரம்மாண்டமான ‘பேலன்சிங்’ விநாயகர் சிலைகள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ‘மும்பை சா பேஷ்வா’ மற்றும் ‘மௌரியா மௌலானா ஆசாத் ரோடு சா’ போன்ற மண்டலங்களின் வித்தியாசமான கலைநயமிக்க சிலைகள் பலரின் பாராட்டுக்களைப் பெற்றாலும், சமூக வலைதளங்களில் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்த நவீன மற்றும் விசித்திரமான வடிவமைப்பு முறைகள் பக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, போட்டிகளாகவும் கண்காட்சிகளாகவும் மாறி வருவதாக நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், “பப்பாவை சர்க்கஸாக மாற்றாதீர்கள்” என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வரும் பயனர்கள், விநாயகரின் உண்மையான வடிவத்தின் எளிய மற்றும் பாரம்பரியமான அழகை இதுபோன்ற செயல்கள் இழக்கச் செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, சமீபத்தில் புலேஷ்வர் சா ராஜா சில விபத்துகளில் சிக்கியது போன்ற சம்பவங்களைக் சுட்டிக்காட்டும் மக்கள், விழாக்களின் போது இதுபோன்ற அபாயகரமான மற்றும் பிரம்மாண்டமான சோதனைகளைத் தாண்டி பாதுகாப்பிற்கும், உண்மையான பக்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வாதிட்டு வருகின்றனர்.
