ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் அருகே உள்ள ஸ்ரீ பாதரியா-லாத்தி ரயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒட்டகங்கள் மீது ரயில் மோதியதில் ஆறு ஒட்டகங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. திங்கள்கிழமை காலை நடந்த இந்த கோர விபத்தில், அதிவேகமாக வந்த ரயில் மோதிய வேகத்தில் ஒட்டகங்களின் உடல்கள் சிதறி அப்பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாகக் காணப்பட்டது.
இந்த துயரமான சம்பவத்தை நேரில் பார்த்த கிராம மக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இந்த விபத்தையடுத்து, உள்ளூர் சமூக ஆர்வலர் முகேஷ் பில் தலைமையில் திரண்ட கிராம மக்கள், உயிரிழந்த ஒட்டகங்களுக்கு உரிய பிரேதப் பரிசோதனை செய்யவும், பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ரயில் பாதையில் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள மக்கள், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தண்டவாளத்தின் ஓரங்களில் வேலி அமைக்க வேண்டும் அல்லது ரயில்களின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
