ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பேரிச்சம் பழத்தை பலரும் தினந்தோறும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த பழத்தை சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகி உள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சோக சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திராவின் சத்யசாயி மாவட்டத்தை சேர்ந்த கங்காதர் (42) என்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டராவார். இவர் பேரிச்சம்பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் பேரிச்சம் பழத்தை அவசர அவசரமாக சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பழத்தை கடித்து மென்று திங்காமல் அப்படியே விழுங்கிவிட்டார். அந்தப் பழம் தொண்டையில் சிக்கிக்கொண்டது.
இதனால் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில் அவசரமாக பேரிச்சம்பழம் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
