அஸ்ஸாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமலிகர் பகுதி அருகே சுற்றித் திரிந்த காட்டு யானை ஒன்றின் கழுத்தில், ராட்சத டிராக்டர் டயர் ஒன்று மிகவும் இறுக்கமாக மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் அந்த யானை உணவருந்த முடியாமலும் மூச்சுத் திணறியும் உயிருக்குப் போராடி வந்துள்ளது.
இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கசிரங்கா வனவிலங்கு மறுவாழ்வு மையம் மற்றும் கோலாகாட் வனத்துறை அதிகாரிகள் இணைந்து களத்தில் இறங்கி, அந்த யானைக்குப் மயக்க ஊசி செலுத்தி, கழுத்தில் இறுக்கமாக இருந்த டிராக்டர் டயரை அறுத்தெடுத்து அகற்றி அதிரடியாக மீட்டனர்.
மனிதர்கள் தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களால் வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “அஸ்ஸாமில் மனிதராக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, யாரும் துயரத்தில் இருக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, யானை மீட்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து மீட்புக் குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
