மங்கோலிய நாட்டின் அதிபராகப் பொறுப்பு வகிப்பவர் 58 வயதான உக்னாகின் குரல்சுக். முன்னாள் ராணுவ அதிகாரியான இவர், பாடிபில்டிங், தற்காப்புக் கலைகள், ராக் இசைப் பேண்டில் கிட்டார் வாசிப்பது மற்றும் ஹார்லி டேவிட்சன் பைக் கிளப் நடத்துவது எனப் பல விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பொழுதுபோக்குகளைக் கொண்டவர்.
இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டின் ராணுவ முகாம் ஒன்றிற்கு ஆய்வுக்காகச் சென்ற அதிபர் குரல்சுக், அங்கிருந்த ஜிம் பகுதிக்குச் சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தான் அணிந்திருந்த அதிபருக்கான சூட் கோட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு, அங்கிருந்த பெஞ்ச் பிரஸ் மேடையில் படுத்து 100 கிலோ எடையுள்ள பார்பெல்லை மிகச் சுலபமாக 20 முறை தூக்கி நிறுத்தியுள்ளார்.
அவரது இந்த அசுரத்தனமான பலத்தைக் கண்டு அங்கிருந்த ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் வாயடைத்துப் போயினர். உடற்பயிற்சியை முடித்தவுடன் அமைதியாக மீண்டும் தனது கோட்டை மாட்டிக்கொண்டு கம்பீரமாக நடந்து சென்ற அதிபரின் இந்த மாஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி இணையவாசிகளின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
