“3,500 அடி பள்ளத்திற்கு மேலே திக் திக் நிமிடங்கள்…” ஜிப்லைனில் நடுவழியில் சிக்கிய சுற்றுலா பயணி…! மகாராஷ்டிர மலையில் நடுங்க வைத்த சாகசப் பயணம்….!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் மாவட்டத்தில் உள்ள தோரன்மால் மலைப் பகுதியில், ‘சீதாகாய் பாயிண்ட்’ என்ற இடத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜிப்லைன் சாகச மையத்தில் சுற்றுலா பயணி ஒருவர் பயணித்துள்ளார். சுமார் 3,500 அடி ஆழமுள்ள பயங்கரமான பள்ளத்தாக்கின் மேலே அவர் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஜிப்லைனில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நடுவழியிலேயே வண்டி நின்றுவிட்டது. இதனால் கீழே பிரம்மாண்ட பள்ளத்திற்கு நடுவே காற்றில் தொங்கியபடி என்ன செய்வதென்று தெரியாமல் அந்தப் பயணி மிகுந்த அச்சத்தில் தவித்தார்.

இருப்பினும், அங்குப் பணியில் இருந்த ஊழியர்கள் சிறிதும் தாமதிக்காமல், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணங்களுடன் அதே ஜிப்லைன் கயிற்றைப் பயன்படுத்திச் சாதுரியமாக அவரிடம் சென்றடைந்தனர். பின்னர் அந்தப் பயணியைப் பத்திரமாக மீட்டு மலைப் பகுதிக்கு அழைத்து வந்தனர். தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சமயோசிதமாகச் செயல்பட்டுப் பயணியின் உயிரைக் காப்பாற்றிய சாகச மைய ஊழியர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.