சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கிய நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் ஒரு கோடி பேர் தங்களுடைய வாக்குரிமையை பறிகொடுக்கும் நிலை ஏற்படும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மத்திய பாரதிய ஜனாத அரசு உள்நோக்கத்தோடு பயன்படுத்துகின்றது என்று கூறினார். இதனிடையே சென்னையில் நேற்று நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவனை வரவேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தனர். அந்த பேனரில் நாளைய முதல்வர், மக்களின் முதல்வர், களத்தில் முதல்வர், சமகால முதல்வர் போன்ற வாக்கியங்கள் அடங்கிய வசனங்கள் இடம் பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கூட நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? 25 ஆண்டுகள் தேர்தல் அரசியலில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஏற்கனவே திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே சற்று கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
