தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் கோ.வி.செழியன் இன்று வெளியிட்டார். இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கடலூரை சேர்ந்த தரணி என்ற மாணவி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் முதல் 10 இடங்கள் பிடித்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முதலிடத்தை தரணி என்ற மாணவி பிடித்த நிலையில் சென்னையை சேர்ந்த மைதிலி இரண்டாம் இடத்தையும் கடலூரை சேர்ந்த முரளிதரன் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்று அசத்தியுள்ளனர். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகமாகும்.. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40,645 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அதனைப் போலவே கடந்த ஆண்டை காட்டிடும் கூடுதலாக 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 26 வரை நடைபெற உள்ளது. இதில் பொது பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீடு இடங்களுக்கான பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
