தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாநில தழுவிய சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது. முதல்வர் விஜய் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல வழக்குகள் நிலுவையில் உள்ள பழைய குற்றவாளிகள், பலதரப்பட்ட குற்றங்களில் தொடர்புடைய ரவுடிகள், நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் குறிவைத்துத் தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.
கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 21 வரையிலான ஒரே வார காலத்தில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. எஃப்.ஐ.ஆர் பட்டியல் மற்றும் காவல் கண்காணிப்பில் உள்ள 31,005 குற்றப் பின்னணி நபர்களிடம் நேரடியாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்ட 1,155 நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதேபோல், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த பிடியாணைகளை நிறைவேற்றுவதில் காவல்துறை தனி கவனம் செலுத்தியது. இந்தச் குறுகிய காலத்தில் மட்டும், ஜாமீனில் வர முடியாத 2,906 பிடியாணைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு குற்றவாளிகள் பிடிபட்டனர். மேலும், வழக்கு விசாரணையின் போது சொந்தப் பிணையிலோ அல்லது ஜாமீனிலோ வெளிவந்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆஜராகத் தவறியவர்கள் மீது இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 384 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நீதிமன்ற நிபந்தனைகளை மீறுபவர்களின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்யச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அனைத்து மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்குத் தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநிலத்தில் அமைதியைப் பேணவும் இதுபோன்ற தீவிர அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் எனத் தலைமைக் காவல் செயலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
