மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு இரண்டு நாள் ஆன்மீக மற்றும் அரசு சார்ந்த சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுச்சேரி காவல் துறையின் மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி அறிவிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உயரிய ‘President’s Colour’ (வண்ண விருது) வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருகிறார். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம் டெல்லியில் ஏற்பட்ட அசாதாரண சூழலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முறைப்படுத்தப்பட்ட பயணத்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வரும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றடைகிறார். அன்றைய தினம் கடற்கரை அருகிலுள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருதை வழங்கி கவுரவிக்கிறார்.
புதுச்சேரி நிகழ்வை நிறைவு செய்த பின், ஆகஸ்ட் 9-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலிலும் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.
ஆன்மீக நிகழ்வுகளை முடித்துக் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, அங்கு தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் முக்கிய அரசியல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். மாநில அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதித்த பிறகு, அன்று இரவே அவர் தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
