இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்…. விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு?…. அதிமுகவை அதிரவைக்கும் புது ட்விஸ்ட்…!

By Nanthini on ஆவணி 6, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தமது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் எம்.எல்.ஏ பதவியை துறந்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதனிடையே, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், கொறடா உத்தரவை மீறியதாக எடப்பாடி தரப்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பிலும் சபாநாயகரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. பின்னர் இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.

   

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்ட் 05) தொடங்கியது. அவை தொடங்குவதற்கு முன்பாக பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார். உள் கட்சிப் பூசல் காரணமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தை எஸ்.பி.வேலுமணியும் சி.வி.சண்முகமும் புறக்கணித்த போதிலும், அதன்பின் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகளில் இருவரும் வழக்கம்போல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.