நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் திமுக கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் வேளையில், அக்கட்சிக்கு புதிய தலைவலியாக உட்கட்சி பூசல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து ஒருபுறம் கூட்டணி கட்சிகள் விலகிச் செல்லும் சூழல் நிலவ, மறுபுறம் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தலைமை மீது அதிருப்தி அடைந்து வருவது திமுகவை நிலைகுலையச் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மத்திய மாவட்ட திமுகவில் ஏற்பட்டிருக்கும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளராகவும், திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவாகவும் இருக்கும் க.செல்வராஜ், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகி ஆவார். கட்சியின் நெருக்கடியான காலகட்டங்களில் முன்னின்று பணியாற்றிய இவருக்கு, சமீபகாலமாக கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தி நிலவி வந்தது. குறிப்பாக, மாற்று கட்சியிலிருந்து வந்த தினேஷ்குமார் என்பவருக்கும், அவருக்கு ஆதரவாக இருக்கும் தொழிலதிபர் ‘டாலர்’ மணி என்பவருக்கும் கட்சித் தலைமை அதிக முக்கியத்துவம் மற்றும் அதிகாரமிக்க பதவிகளை வழங்குவதாகக் கூறி செல்வராஜ் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்றார்.
இந்த வேதனையின் காரணமாக, கடந்த தேர்தலில் தான் கேட்காத பல்லடம் தொகுதி ஒதுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, தனது 50 ஆண்டு கால விசுவாசத்திற்கு மதிப்பில்லையோ என்று கேள்வி எழுப்பி தனது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைக்கு கடிதம் அனுப்பி பரபரப்பை கிளப்பினார். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பின் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதை விரும்பாத திமுக தலைமை, செல்வராஜை நேரில் அழைத்து கடுமையான தொனியில் பேசியுள்ளது. தற்போதைய சூழலில் கட்சியின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்று தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, செல்வராஜ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டு, மீண்டும் தனது மாவட்ட செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
க.செல்வராஜ் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டாலும், திருப்பூரில் ஏற்பட்டுள்ள இந்த பஞ்சாயத்து திமுக தலைமைக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. செல்வராஜின் இந்த மனநிலையைப் போல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல மாவட்ட செயலாளர்களும் மாற்று கட்சியினரின் ஆதிக்கம் மற்றும் தொழிலதிபர்களின் தலையீடுகளால் கடும் அதிருப்தியில் இருப்பதாக திமுகவினர் புலம்பி வருகின்றனர். திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் திமுக தலைமையைக் கடுமையான அலர்ட்டில் வைத்துள்ளதால், மற்ற மாவட்டங்களிலும் உள்ள உட்கட்சிப் பிரச்சினைகளை உடனடியாகச் சரிசெய்யும் தீவிர நடவடிக்கைகளில் தலைமை தற்போது இறங்கியுள்ளது.
