தினமும் டீ காபி உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்காதீங்க… அதுக்கு பதிலா இதை நீங்க ட்ரை பண்ணலாமே?

By Elango on தை 3, 2026

Spread the love

தினமும் டீ மற்றும் காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தாலும் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். நீரிழிவு இதய நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டும். கஃபைன் அளவை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உருவாகியுள்ளது. இதனால் டீ காபி பழக்கத்தை முழுமையாக கைவிடவும் முடியாமல் சர்க்கரை இல்லாத டீ காபியை குடிக்கவும் முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் டீ காபிக்கு மாற்றாக சர்க்கரை இல்லாத குடிக்கும் பானங்கள் குறித்து இப்போது நாம் தெரிந்துக்கொள்ளலாம். இது உடலுக்கு ஆரோக்கியம் தரும் பானங்களாகவும் இருக்கின்றன. நெல்லிக்காய் தேநீர் – வெந்நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலந்து தேவை எனில் சிறிதளவு தேன் சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது.

   

கிரீன் டீ – ஆக்சிஜனேற்றிகள் நிறைந்த இந்த பானம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது. சுறுசுறுப்பையும் தருகிறது. வெந்தய தேநீர் – இது குளிர்காலத்தில் வயிற்று பிரச்னை வீக்கம் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. சோம்பல் அதிக தூக்கம் போன்ற பிரச்சனைகளை தவிர்த்து உற்சாகத்தை தருகிறது.

   

புதினா தேநீர் – செரிமானத்தை மேம்படுத்தி மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது. ஒரு டம்ளர் தண்ணீர் கொதித்தவுடன் புதினா இலைகளை சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வடிகட்டி குடிக்கலாம். இது தலைவலி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஓமம் தேநீர் – சளி இருமல் தொண்டை புண் உள்ளவர்களுக்கு இயற்கை மருந்தாக உள்ளது. கிரீன் டீயுடன் ஓமத்தை சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பதால் உடலுக்கு தேவையான வெப்பமும் ஆற்றலும் கிடைக்கும்.

 

ஆவாரம்பூ தேநீர் – சர்க்கரை நோயாளிகளுக்கு பரவலாக பரிந்துரைக்கப்படும் ஒரு பாரம்பரிய பானமாகும். கொதிக்கும் நீரில் இஞ்சி ஏலக்காய் மற்றும் உலர்ந்த ஆவாரம் பூ சேர்த்து சாறு இறங்கிய பின் வடிகட்டி குடிக்கலாம். இது தவிர இஞ்சி எலுமிச்சை பானம் சுக்கு மிளகு கசாயம், மஞ்சள் கலந்த வெந்நீர் போன்றவையும் மிக ஆரோக்கியமானது. டீ காபி குடிக்க தோன்றும் நேரத்தில் மாற்றாக இவற்றை குடிக்கலாம். இவை அனைத்தும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க முடியும் என்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக அமையும்.