இந்தியத் தபால் அலுவலகங்கள் தற்போது அஞ்சல் சேவைகளைத் தாண்டி வங்கிச் சேவைகளையும், பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும் வழங்கி வருகின்றன. அதில், வங்கிகளின் நிலையான வைப்பு நிதிக்கு (Fixed Deposit – FD) இணையான டைம் டெபாசிட் (Time Deposit – TD) திட்டம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தத் திட்டமானது பல வங்கிகளின் FD-க்களை விட வலுவானதாகவும், சிறந்த வட்டி விகிதங்களை வழங்குவதாகவும் கருதப்படுகிறது.
தற்போது, தபால் துறையானது ஒரு வருட TD-க்கு 6.9%, 2 வருடங்களுக்கு 7.0%, மற்றும் 3, 5 வருடங்களுக்கு 7.5% வட்டி விகிதங்களை வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் 5 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் ரூ. 44,995 வட்டியாக மட்டுமே கிடைக்கும். முதிர்வுத் தொகையாக உங்களிடம் மொத்தம் ரூ. 1,44,995 இருக்கும். இது வங்கிகளின் FD-யை விட அதிக வருமானம் தர வாய்ப்புள்ளது.
இந்தக் கணக்கைத் திறக்கக் குறைந்தபட்சம் ரூ. 1,000 இருந்தால் போதுமானது, அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் கிடையாது. இந்தக் கணக்கில் ஒற்றைக் கணக்கு அல்லது மூன்று நபர்கள் வரை இணைந்த கூட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், இது மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்குவதால், முதலீட்டிற்கு 100% அரசு உத்தரவாதம் கிடைக்கிறது. எந்தவொரு இடரும் இல்லாமல், பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்த விரும்புவோர் இந்த 5 வருட போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
