பழிக்குப்பழியா?… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… 6 கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கொடூர கொலை… போலீஸ் தீவிர விசாரணை…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான செல்வ முருகன் துப்பாக்கி செல்வம், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் ஆறு கொலை வழக்குகள் உட்பட 27 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடி காவல்துறையின் ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் பட்டியலில் இருந்த இவருக்கு, எதிரிகள் மூலம் உயிராபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்திருந்தனர். இதனால் பாதுகாப்பிற்காக கன்னியாகுமரிக்கு இடம்பெயர்ந்த அவர், கடந்த இரண்டு மாதங்களாக தனது தாயாரின் சொந்த ஊரான ஈத்தங்காடு பகுதிக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, சங்கநேரி பகுதியில் உள்ள தனது தாயாருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்திற்குச் சென்ற செல்வம் அங்கு தங்கியிருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் அருகிலுள்ள தோட்டத்துக்காரர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி மற்றும் கூடங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

   

கொலை நடந்த இரவில் செல்வம் தனது நண்பர் ஒருவருடன் தோட்டத்தில் மது அருந்தியுள்ளார். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், தோட்டத்திற்குள் இருவர் மட்டுமே சென்றதற்கான காட்சிகள் பதிவாகியுள்ளன. தற்போது செல்வத்துடன் இருந்த நண்பர் தலைமறைவாகி செல்போனும் அணைக்கப்பட்டுள்ளதால், போதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டபடி வேறு நபர்கள் உள்ளே புகுந்து இச்செயலை அரங்கேற்றினரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.