உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து பாகி(12), பிராச்சி(14) மற்றும் விஷிகா(16) ஆகிய மூன்று சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் எழுதிய 8 பக்க தற்கொலைக் கடிதம் சிக்கியது. அதில், கொரிய கலாச்சாரம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் மீது அவர்கள் கொண்டிருந்த அதீத மோகம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்கொலைக்குத் தூண்டும் அம்சங்களைக் கொண்ட ஒரு கொரிய ஆன்லைன் டாஸ்க் விளையாட்டே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
அந்தச் சிறுமிகளின் தந்தை கூறுகையில், கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில்தான் இந்த ஆன்லைன் அடிமைத்தனம் தொடங்கியதாகத் தெரிவித்தார். படிப்படியாகப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திய அவர்கள், தங்களுக்குக் கொரியப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு அந்த விளையாட்டின் விதிகளின்படி குளிப்பது, உண்பது என அனைத்தையும் ஒன்றாகவே செய்துள்ளனர். இறுதியில் “கொரியாதான் எங்கள் வாழ்க்கை” எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஆன்லைன் விளையாட்டுகளின் ஆபத்துகள் குறித்துப் பெற்றோர்களுக்குப் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
