ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை..! ஒரே இரவில் ஃபேமஸ் ஆக.. அரசு பெண் டாக்டருக்கு மிரட்டல்…? அதிர்ச்சி பின்னணி…!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அரசு மாவட்ட மருத்துவமனையில் மூத்த பெண் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் அபிதா காதுன் என்பவருடன் சில இளம்பெண்கள் தவறாக நடந்துகொண்டு, அவரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள டாக்டர் அபிதா, இது தன்னையும் அரசு மருத்துவக் கட்டமைப்பையும் அவமதிப்பதற்காகச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சதி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவத்தன்று நாஜிஷ், ஜுனைரா என்ற இரு இளம்பெண்கள் தங்களது தாயுடன் மருத்துவமனையின் தோல் நோயியல் பிரிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனை விதிகளின்படி தங்களது சரியான முகவரி, தொலைபேசி எண் அல்லது அடையாள அட்டை போன்ற எந்தவொரு விவரத்தையும் பதிவு செய்யாமல், பணியாளர்களிடம் தவறாக நடந்துகொண்டு வலுக்கட்டாயமாக மருத்துவ அறைக்குள் நுழைந்துள்ளனர். இதனை மருத்துவர் எதிர்த்தபோது, அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசி, “அறையை விட்டு தூக்கிவிடுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இந்த முழு சம்பவத்தையும் தங்களது மொபைல் போனில் திட்டமிட்டு வீடியோவாகப் பதிவு செய்து, தவறான தகவல்களுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.

   

இந்தச் சம்பவம் குறித்து டாக்டர் அபிதா கூறுகையில், அந்த இளம்பெண்கள் சிகிச்சைக்காக வரவில்லை என்றும், சமூக ஊடகங்களில் ஒரே இரவில் பிரபலமாவதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெறும் 71 பின்தொடர்பாளர்களைக் கொண்ட 17 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பின்தொடர்பாளர்களையும் பார்வைகளையும் அதிகரிப்பதற்காக இந்த வீடியோ திட்டமிட்டுப் பதிவேற்றப்பட்டு, அரைமணி நேரத்திற்குள் 21 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த அச்சுறுத்தலால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.