பகீர்..! அச்சுறுத்தம் எபோலா வைரஸ்.. இதுவரை 134 பேர் பலி..!!

By Swetha on வைகாசி 20, 2026

Spread the love

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ‘புந்திபுகியோ’ எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தத் தொற்று பாதிப்பால் இதுவரை 134-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கோவின் எல்லைப் பகுதிகளைத் தாண்டி அண்டை நாடான உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலா வரை இந்தத் தொற்று பரவியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த எபோலா வைரஸ் பரவலின் வேகம் மற்றும் அதன் வீரியம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தனது ஆழந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். நகர்ப்புறங்களில் தொற்று வேகமாகப் பரவுவது, சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பது மற்றும் மக்களின் அதிகப்படியான இடப்பெயர்வு ஆகியவை இந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலைமையின் தீவிரத்தைக் கருதி, உலக சுகாதார அமைப்பு இதனை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக (PHEIC) அறிவித்துள்ளது.

   

தற்போது காங்கோவில் பரவி வரும் இந்த எபோலா வகைக்கு எனப் பிரத்யேகமான தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையோ இல்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. முந்தைய எபோலா பாதிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், அவை பயன்பாட்டுக்கு வரக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில், மருத்துவர்கள் எல்லை இல்லாத அமைப்பினர் (MSF) மற்றும் ரெட் கிராஸ் போன்ற சர்வதேச அமைப்புகள் அங்குள்ள மக்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களையும், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகளையும் வழங்கித் துரித நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.