ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்வால் பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்ற அந்தப் பெண், எம்.டி லைன்ஸ் பகுதியில் உள்ள கிராண்ட் லாட்ஜ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையின்படி, வியாழக்கிழமை இரவு கோல்கொண்டாவைச் சேர்ந்த பரூக் (34) என்ற நபருடன் ரேணுகா அந்த ஹோட்டலில் தங்கியுள்ளார். தான் சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டுத் திரும்பியபோது, ரேணுகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக பரூக் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ரேணுகாவின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும், பரூக் தான் ரேணுகாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஹோட்டல் பதிவுகளின்படி, வியாழக்கிழமை இரவு 11:56 மணியளவில் ரேணுகா உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன் பின்னர், அவர் தனது நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் செய்ததாகவும், அந்த அழைப்பின் போதே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சில முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரேணுகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து வரும் போலீசார், ரேணுகாவின் மொபைல் ஃபோனையும் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் பரூக்கிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் உண்மைத்தன்மை மற்றும் ரேணுகாவின் மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வறிக்கை வந்த பிறகே முழுமையாகத் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
