திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, விசிக மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளை மறைமுகமாக விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுக்கு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆ. ராசாவின் இந்தச் செயல் நாகரிகமற்றது என்றும், அரசியல் ஒழுக்கத்தின் எல்லைகளைத் தாண்டியது என்றும் தவெக விமர்சித்துள்ளது.
சமீபத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணியில் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இதைக் குறிப்பிடும் வகையில் ஆ. ராசா தனது எக்ஸ் (X) பக்கத்தில், “தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த தென்னை மரம், எதிர்த்த வீட்டுக்கு வளைந்து இளநீர் கொடுத்தால் அதற்கு இலக்கியத்தில் ‘முற்றத்தெங்கு’ என்று பெயர்; அரசியலில் இதற்கு என்ன பெயர்?” எனப் பதிவிட்டிருந்தார்.
ஆ. ராசாவின் இந்தத் ‘தென்னை மர’ உவமை, தவெக முன்மொழிந்த “அதிகாரப் பகிர்வு” கொள்கையின்படி கூட்டணி அமைத்த சிறிய கட்சிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தவெக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், தவெகவின் நேர்மையான அரசியல் தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தை உடைத்துவிடும் என்ற பயத்திலும், ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற பதற்றத்திலுமே திமுகவினர் இவ்வாறு புலம்புகிறார்கள் என்றும் தவெக தனது அறிக்கையில் சாடியுள்ளது.
