திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு பதிலளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவுக்கு அதிக சீட் கொடுத்தால் உங்கள் கண்ணை ஏன் உறுத்துகிறது? உங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்ததும் கூட்டணி மாறிவிட்டீர்கள்” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தேமுதிக மீது எங்களுக்கு எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டபோது அதை முதன்முதலில் முழு மனதோடு வரவேற்ற ஒரே கட்சி விசிக தான்” என்று விளக்கமளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “கூட்டணிக்குள் இருந்த கட்சிகளிடையே ஏற்பட்ட கசப்புணர்வுகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன என்பதை விளக்குவதற்காகவே தேமுதிகவுக்குத் திடீரென 10 இடங்கள் ஒதுக்கப்பட்டதையும் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டேன். மற்றபடி தேமுதிகவைக் குறைத்து மதிப்பிடும் நோக்கம் எனக்கு இல்லை. வரவிருக்கும் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணியே வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
