உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே விவாகரத்து வரை சென்ற பிரச்சனை, காவல்துறையினரின் சுமுகமான தலையீட்டால் முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ள நிலையில், அவர்களைப் பிரித்து ஆளுக்கு இரண்டு மகன்கள் பொறுப்பேற்றுக் கொண்டதால், கணவன்-மனைவி இடையே தொடர்பு அறுந்து இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் முதியவர் தன் மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மூதாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவச் செலவுக்குக் கணவரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் கணவர் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது விவாகரத்து கோரும் அளவுக்குப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.
https://twitter.com/Sachingupta/status/2100507132907106586/video/1
இப்பிரச்சனை காவல்துறைக்குச் சென்றதை அடுத்து, அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து முறையான ஆலோசனை வழங்கினர். இறுதியில், மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக கணவர் மாதம் 5,000 ரூபாய் வழங்க ஒப்புக்கொண்டார். காவல்துறையினரின் இந்தச் சமயோசிதமான நடவடிக்கையால், 51 காலத் திருமண வாழ்க்கை முறிந்து போகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.
