“அடுத்த டார்கெட் கோட்டை தான்…!” வெறும் 2 சீட்டுக்கே புலம்புறாங்க… நினைச்சா முதலமைச்சரே ஆகலாம்… திருமாவளவன் ஆவேசப் பேச்சு…! தமிழக அரசியலில் பரபரப்பு…!!

By Swetha on ஆடி 17, 2026

Spread the love

தொல். திருமாவளவன் திருவாரூரில் நடைபெற்ற கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றுப் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்குரிய பணிகளைச் சரியாகச் செய்தால் கட்சியின் ‘முதலமைச்சர் கனவு’ நிச்சயம் நனவாகும் என்று குறிப்பிட்டார். இந்தச் சமூகம் தங்களை அவ்வளவு எளிதில் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுவிடாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுவிட்டு அதற்குள் அமைச்சர் பதவியும் வாங்கிவிட்டார்களே என காழ்ப்புணர்ச்சியோடு புலம்புபவர்களுக்குத் தனது பதிலடியைக் கொடுத்தார். அந்த இரண்டு இடங்கள் இல்லாமல் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதே உண்மை என்றும், தங்களுக்குக் கிடைத்துள்ள அமைச்சர் பதவியை ஒரு பெரிய சாதனையாகத் தாங்கள் கருதவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தில் திமுக, அதிமுக என எந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், ஏன்… எதிர்காலத்தில் விசிகவே ஆட்சிக்கு வந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளையும் சமூகத் தீமைகளையும் ஒரே நாளில் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று திருமாவளவன் எதார்த்தமாகப் பேசினார். இதற்குக் குறை சொல்வது எளிது என்றாலும், தீர்வு சொல்வது மிகவும் கடினம் எனக் குறிப்பிட்ட அவர், அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த அரசியல் சாசன சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே காலப்போக்கில் இதற்கு முழுமையான தீர்வு காண முடியும் என்றும், இந்த அரசியல் புரிதல் கட்சித் தொண்டர்களிடம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

   

மேலும், ஒரு கூட்டணியில் இணைந்துவிட்டால் மற்றொரு அணியில் உள்ளவர்களுடன் எந்தவொரு நட்போ அல்லது உறவோ வைத்துக் கொள்ளவே கூடாது என்று கூறுவது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல என்று அவர் குறிப்பிட்டார். அவ்வாறு நட்பு பாராட்டாமல் இருப்பது நம்பிக்கைக்கு எதிரானது மற்றும் அது ஒருவகையான நம்பிக்கைத் துரோகம் என்றும் சுட்டிக்காட்டிய திருமாவளவன், அரசியல் தளத்தில் பரஸ்பர உறவுகளையும் புரிதலையும் பேண வேண்டியதன் அவசியத்தை தனது உரையின் நிறைவில் வலியுறுத்தினார்.