தருமபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், முதலமைச்சர் விஜய் அரசுக்குத் தங்களது கட்சி ஆதரவு அளித்ததன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார். கரூர் சம்பவத்தின்போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்யத் தயங்கியது முதல், அன்றைய நிலையில் விஜய்யின் அரசியலை ‘ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளை’ என விமர்சித்தது வரை தனது முந்தைய நிலைப்ாடுகளை அவர் நினைவுகூர்ந்தார். அன்றைய தினங்களில் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் அதிமுக, பாமக அல்லது பாஜகவின் ஆதரவைக் கோராமல், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியதே தங்களது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த அரசியல் நகர்வைக் சுட்டிக்காட்டிய திருமாவளவன், “எங்களை விமர்சிப்பவர்கள், என்னை எதிரியாகப் பார்த்த விஜய்யிடம் ஏன் இந்த ஆதரவைக் கேட்டீர்கள் என்று கேள்வி எழுப்புவதில்லை” என்றார். மேலும், காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் விஜய் நெருக்கம் காட்டியது தமக்கு வியப்பளித்ததாகவும், பாஜகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் அவர் எடுத்த துணிச்சலான முடிவே தங்களின் முடிவுக்கு முதல் காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மறைமுகமாக பாஜகவின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் எடுத்த முடிவின் வழியில் விசிகவும் விஜய் அரசுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக விளக்கினார்.
கூட்டணிக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வையும் திருமாவளவன் பகிர்ந்து கொண்டார். விஜய் இக்கூட்டணிக்கு ‘சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்று பெயர் சூட்ட விரும்பியபோது, அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் எனத் தான் வலியுறுத்தியதாகக் கூறினார். பாஜக மற்றும் பல்வேறு சாதியவாத அமைப்புகளும்கூட ‘சமூக நீதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதால், வெறும் சமூக நீதி என்று மட்டும் குறிப்பிட்டால் அது பாஜக எதிர்ப்பு என்ற தெளிவான அரசியல் பார்வையைத் தராது என்பதை விஜய்யிடம் எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.
தமது சுட்டிக்காட்டலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய், கூட்டணியின் பெயரை ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என உடனடியாக மாற்றியமைக்கச் சம்மதித்ததாகக் குறிப்பிட்ட திருமாவளவன், மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு உரிய முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியவர் தாமே என்பதையும் பதிவு செய்தார். இறுதியாக, தங்களின் இந்த அரசியல் முடிவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்கள் மற்றும் தேவையற்ற சர்ச்சைகளைக் கண்டு விசிக தொண்டர்கள் பொருட்படுத்தவோ அல்லது எதிர்வினையாற்றவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
