விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே அமைந்துள்ள கொடுக்கூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தார். தமிழக இடைத்தேர்தலில் தவெக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர்கள் என திருத்தம் செய்து மீண்டும் அறிவிப்பு வெளியிடுவார்கள்; பெயர்கள் சேர்க்கப்பட்டாலும் நீக்கப்பட்டாலும் அவர்கள் எப்போதும் நட்சத்திர பேச்சாளர்களே” என்று விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியது குறித்துப் பேசிய வன்னி அரசு, திட்டமிட்டு அவதூறு பரப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்ற நோக்கத்திலேயே அவர் அவ்வாறு கூறியிருப்பார் என்றார். மேலும், “நாங்கள் ஆக்கபூர்வமான கேள்விகளையும் விமர்சனங்களையும் எப்போதும் வரவேற்கிறோம். எங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவும் நியாயமான கேள்விகளுக்குப் பதில் அளிக்க நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம்” என்றும் உறுதியளித்தார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் பயணித்த காரின் பதிவு எண் குறித்து எழும் சர்ச்சைகளுக்குப் பதிலளித்த அவர், சமூக நீதி விழா நடத்திய அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்த காரிலேயே அவர் பயணித்ததாகவும், அதனை அரசியல் உள்நோக்கத்துடன் விவாதப் பொருளாக்குவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார். திருமாவளவனை முதன்மைத் தலைவராக்குவதே தங்களின் கனவு எனத் தெரிவித்த அவர், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
