தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகியவை ஏற்கனவே ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில், விசிக (VCK) கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மேலோங்கியுள்ளது. தனது முடிவை இன்று (மே 9) அறிவிப்பதாகத் தெரிவித்திருந்த விசிகவின் ஆதரவிற்காக, தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து, தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு குறித்த தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவுள்ளார். திருமாவளவனின் இந்த அறிவிப்பு தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
