பாஜக இல்லாத புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க முடியும் என விசிகவில் இருந்தபோது ஆதவ் அர்ஜுனா கூறியதாக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், துணை முதலமைச்சர் ஆகலாம் என்பது போன்ற அதிகார ஆசை வார்த்தைகளைக் கூறி ஆதவ் அர்ஜுனா தன்னைப் ‘பிரைன்வாஷ்’ செய்ய முயன்றதாகவும், ஆனால் தான் அதற்கு மயங்காமல் உறுதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பதவி ஆசைக்காகத் தற்போதைய கூட்டணியை உடைத்தார் என்ற களங்கம் தனது அரசியல் வாழ்க்கையிலும் வரலாற்றிலும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்ததாகத் திருமாவளவன் கூறியுள்ளார். கொள்கை மற்றும் தோழமைக்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட்டதால், அதிகார இடங்களைப் பிடிப்பதற்கான அத்தகைய கவர்ச்சி வாக்குறுதிகளுக்குத் தான் பலியாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
