“உன் புள்ள கையில கிடைச்சா கொன்னுருவோம்னு சொன்னாங்க.. செஞ்சுட்டாங்க!” – கதறும் தந்தை! சிவகங்கையில் அடுத்த லாக்-அப் மரணமா?

By Muthu Mani on பங்குனி 8, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் சீயோன் நகர் பகுதியில் இருவர் வெட்டப்பட்ட வழக்கில், மானாமதுரை போலீசார் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசன் (26) மற்றும் அவரது நண்பர் குணா ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான ஆகாஷ் பிடிபடும்போது கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறி, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மரணம் குறித்து ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன் அதிர்ச்சியூட்டும் புகார்களை முன்வைத்துள்ளார். தனது மகனை விசாரணை என்ற பெயரில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், கால்களில் கற்களை வைத்துத் தாக்கி காலை உடைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “உன் மகனை கையில் கிடைத்தால் கொன்றுவிடுவோம்” என்று போலீசார் ஏற்கனவே மிரட்டியதாகவும், அவர்கள் திட்டமிட்டே தனது மகனை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

   

சம்பவத்தன்று ஆகாஷை கைது செய்ய வேண்டும் எனக்கூறி தன்னையும் தனது மனைவியையும் காவல் நிலையத்தில் அடைத்து வைத்ததாகவும், பிறகு ஆகாஷ் கிடைத்துவிட்டதாகக் கூறி தங்களை அனுப்பிவிட்டதாகவும் ராஜேஷ் கண்ணன் கூறியுள்ளார். தனது மகனை சாதிய ரீதியாக இழிவுபடுத்தித் தாக்கியதே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என அவர் சாடியுள்ளார். “என் மகன் தவறு செய்திருந்தால் சட்டப்படி தூக்குத் தண்டனை கூட கொடுத்திருக்கலாம், ஆனால் இப்படி அடித்துக் கொன்றதை ஏற்க முடியாது” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

   

தற்போது ஆகாஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் வரும் வரை உடலைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மானாமதுரை பகுதியில் மற்றொரு கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.