திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது உறவினர் பூபதி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (38) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சண்முகம் தனது உறவினரான பூபதிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நந்தகுமார் சண்முகத்தின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு சண்முகம் கெஜல்நாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த நந்தகுமார், சண்முகத்தை கொலை செய்யும் நோக்கத்தில் அவர் மீது காரை வேகமாக மோதச் செய்துள்ளார். கார் வருவதைக் கண்டு சண்முகம் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இருப்பினும், இந்த விபத்தில் அவரது இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்தது.
பாதிக்கப்பட்ட சண்முகம் இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சண்முகத்தை கார் ஏற்றி கொல்ல முயன்ற நந்தகுமார், அதிமுகவின் கந்திலி ஒன்றிய இளம் பாசறை துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவது தெரியவந்தது. அரசியல் பிரமுகர் ஒருவரே கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகி நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், அதிமுக நிர்வாகி ஒருவரின் இந்தச் செயல் திருப்பத்தூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
