புதுச்சேரியில் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் போலி மருந்து தயாரிப்பு கும்பல்களின் அத்துமீறல்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2024-ல் சன் ஃபார்மா அளித்த புகாரின் பேரில் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி விசாரணை, தற்போது சி.பி.ஐ-யின் தீவிர கண்காணிப்புக்கு சென்றுள்ளது. வழக்கில் கைதான ‘மதுரை’ ராஜா என்பவர், சி.பி.ஐ விசாரணையை முடக்குவதற்காக டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுத்த விவகாரமும் அம்பலமாகி பரபரப்பை கூட்டியுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சி.பி.ஐ அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைகளால் புதுச்சேரியின் போலி மருந்து நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் இலங்கை கடத்த முயன்ற ‘பிரிகாபலின்’ மாத்திரைகளை கியூ பிராஞ்ச் போலீஸார் பறிமுதல் செய்ததையடுத்து, விசாரணையின் முனை குருமாம்பேட்டில் உள்ள ‘மெடினோக் ஹெல்த் கேர்’ நிறுவனத்தை நோக்கி திரும்பியது. அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்து, அந்நிறுவன உரிமையாளர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். மேலும், விழுப்புரம் பூத்துறையில் உள்ள அவரது அனுமதி பெறாத குடோனில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 625 வகையான போலியாக தயாரிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் அதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது அதிகாரிகளை உறைய வைத்தது. உயிர்காக்கும் மருந்துகள் என்ற பெயரில் போலி மருந்துகள் நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத் தவறியதாக, புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் அனந்தகிருஷ்ணன் தற்போது அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக சுகாதாரத்துறை செயலராக இருந்த முகமது யாசினும் மிசோராமுக்கு மாற்றப்பட்ட நிலையில், போலி மருந்து மாஃபியாவுக்கு துணைபோன மேலும் பல உயரதிகாரிகள் மற்றும் முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.ஐ விசாரணையின் மூலம் இந்த சட்டவிரோத போலி மருந்து சாம்ராஜ்யத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
