‘மன்னர் வகையறா’ திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விமல் அளித்த காசோலை வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், அவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறு குறு வழக்குகளுக்கான நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தும், கடனைத் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நடிகர் விமல் தரப்பில், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததுடன், அவருக்கு 30 நாட்கள் இடைக்கால ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
