மணல் அள்ளவா?… பதவி வாங்கவா?… தவெக-வில் இணைந்த மாஜிக்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய அதிமுக மாஜி…. நெட்டிசன்கள் ஷாக்….!

By SATHISH R on ஆடி 12, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்காது என்றும், இது பல்வேறு கட்சிகளின் கூட்டணியோடு அமைந்துள்ள ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார். தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் செய்யவே முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகள் என்றும் அவர் சாடினார்.

அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் குறித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜி, “அதிமுகவிலிருந்து அங்குக் சென்றவர்கள் மணல் அள்ளிவிடலாமா, கல்லை அள்ளிவிடலாமா அல்லது பெரிய போஸ்டிங் வாங்கிவிடலாமா என்ற லாப நோக்கத்தோடுதான் சென்றுள்ளார்கள்” என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, சமீபத்தில் அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி இந்த விமர்சனத்தை அவர் முன்வைத்தார்.

   

மேலும், தேர்தலில் தவெக பெற்ற வெற்றி என்பது ஒரு கானல் நீர் போன்றது என்றும், அது நிரந்தரமானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக, திமுக வேண்டாம் என நினைக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள், புதிதாக வருபவர்களுக்கு வாக்களிப்பது வழக்கம் தான் என்றும்; வைகோ, விஜயகாந்த், சீமான் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிகராக இருந்ததால் அந்த வாக்குகள் எளிதாக அவருக்குச் சென்றுள்ளன என்றும் விளக்கமளித்தார். வேட்பாளர் யார் என்றே தெரியாமல் மக்கள் செலுத்திய இந்த வாக்குகள் அனைத்தும் செல்லாத வாக்குகளுக்கு இணையானவை என்றும், தவெக எம்.எல்.ஏக்களுக்கு மக்களிடத்தில் தற்போது எவ்வித மரியாதையும் இல்லை என்றும் கூறினார்.

   

“அதிமுக தூர்ந்து போன கட்சி” என்று முதல்வர் விஜய் பேசியதற்குப் பதிலடி கொடுத்த ராஜேந்திர பாலாஜி, இதுபோன்ற எண்ணற்ற அரசியல் விமர்சனங்களைக் கடந்து பழக்கப்பட்ட இயக்கம் அதிமுக என்றும், அதை வரும் காலங்களில் தங்களது செயல்களால் நிரூபித்துக் காட்டுவோம் என்றும் சவால் விடுத்தார். விஜயை நம்பி தவெக-விற்குச் சென்றவர்கள் அனைவரும், மீண்டும் அதிமுகவில் இணைய அனுமதி கேட்கும் காலம் மிக விரைவில் வரும் என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.