விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த உமா, தென்காசியில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் படித்து வந்தபோது, அங்கேயே பயின்ற ராஜேஷ் என்பவருடன் காதலில் விழுந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், பயிற்சி கட்டணம் செலுத்த வந்த உமாவைச் சமாதானம் செய்வதற்காக ராஜேஷ் கஸ்தூரிரெங்கபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் உமா பழகுவது குறித்து மீண்டும் மோதல் ஏற்பட, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ராஜேஷ் உமாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த ராஜேஷ், தான் திட்டமிட்டுப் படுகொலை செய்யவில்லை என்றும் ஆத்திரத்தில் கை மீறிப் போய்விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உமா மயங்கி விழுந்ததும் பதற்றமடைந்து 108 ஆம்புலன்ஸை அழைத்ததாகக் கூறிய அவர், தவறு செய்துவிட்டதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். தற்போது உயிரிழந்த உமாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், காதல் விபரீதத்தால் நடந்த இந்த மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
