எகிப்தின் கிசா பகுதியில் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து எதிர்பாராத விதமாக சிறுவன் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அருகில் இருந்த அகமது ராகப் என்ற இளைஞர், குழந்தை விழுவதைக் கண்டு உடனடியாக சம்பவ இடத்தை நோக்கி ஓடிச் சென்றுள்ளார்.
விழுந்த சிறுவன் முதலில் துணி காயப்போடும் கயிற்றில் சிக்கியதால், அவனது வேகம் சிறிதளவு குறைந்துள்ளது. அந்த சில நொடிகளை சரியாகப் பயன்படுத்திய இளைஞர், சிறுவன் தரையை அடைவதற்கு முன்பே தனது கைகளால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியுள்ளார். இந்த அதிரடி மீட்பு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பிறகு, தான் செய்த செயலின் ஆபத்தை உணர்ந்து அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. குழந்தை ஆபத்தில் இருப்பதை பார்த்ததும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் இயல்பாகவே ஓடிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது துணிச்சலுக்கும் துரிதமான செயல்பாட்டிற்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
