சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டி வருகிறார். நகரத்தில் இருந்த சொகுசான பணியைத் துறந்துவிட்டு, தனது தந்தையின் பாரம்பரியத் தொழிலான பாம்புப் பண்ணையை அவர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் பல்லாயிரக்கணக்கான நல்ல பாம்புகளும், ‘ஐந்தடி பாம்புகள்’ எனப்படும் கொடிய வகை பாம்புகளும் வளர்க்கப்படுகின்றன. பாம்புகளுக்கு உணவளிப்பது முதல் அதன் விஷத்தை எடுப்பது வரை அனைத்தையும் மிகத் துணிச்சலாக இவர் செய்து வருகிறார்.
மருந்து தயாரிப்பு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உணவுத் தேவைக்காகப் பாம்பின் விஷம், தோல், இறைச்சி மற்றும் எண்ணெய் போன்றவை இங்கிருந்து விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச சந்தையில் ஒரு கிராம் பாம்பு விஷம் அதன் தரத்தைப் பொறுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதால், இந்தத் தொழில் அவருக்குப் பெரும் வருமானத்தைத் தருகிறது. சமூக வலைத்தளங்களில் ‘பாம்பு விஷம் சேகரிக்கும் பெண்’ எனப் புகழ்பெற்ற கின், இதில் இருக்கும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இக்கட்டான இந்தத் தொழிலில் ஒரு பெண்ணாக அவர் சாதித்து வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.
