தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில், 65 வயது மதிக்கத்தக்க சோந்திராத் என்ற பெண்மணி, இறந்துவிட்டதாகக் கருதி இறுதிச் சடங்கிற்காகப் புத்தக் கோயில் ஒன்றிற்குச் சவப்பெட்டியில் எடுத்துச் செல்லப்பட்டபோது, ஓர் ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைபோகிளைசீமியா என்ற இரத்தச் சர்க்கரைக் குறைபாடு காரணமாகச் சில நாட்களாகப் பேச்சு மூச்சின்றி இருந்ததால், உறவினர்கள் அவர் இறந்துவிட்டதாக எண்ணி, உடல் தானம் செய்ய முயன்றனர். ஆனால், மருத்துவமனை இறப்புச் சான்றிதழ் கேட்டதால், இலவச இறுதிச் சடங்கிற்காகப் புத்தர் கோயிலுக்கு உடலைக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு, சவப்பெட்டியிலிருந்து திடீரெனச் சத்தம் கேட்கவே, சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, சோந்திராத் கண்களைத் திறந்து, சவப்பெட்டியின் உள்பக்கத்தைத் தட்டி, காலால் தள்ள முயன்றது தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
சிகிச்சையில் முன்னேற்றம் அடைந்துள்ள அப்பெண்ணின் மருத்துவச் செலவை அந்தக் கோயில் நிர்வாகமே ஏற்றுக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் சோந்திராத்துக்கு மாரடைப்பு அல்லது மூச்சுத்திணறல் ஏற்படவில்லை, வெறும் மயக்கம்தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். சடங்கிற்காக 500 கி.மீ தூரம் பயணம் செய்த உறவினர்கள், சோந்திராத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.
