கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன் (38). இவருக்கு மகேஸ்வரி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இளவரசன் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் தங்கி, கடந்த 4 ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து வந்துள்ளார். தான் அங்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த மாதச் சம்பளமான ₹25,000 பணத்தை அப்படியே தன் மனைவி மகேஸ்வரியின் செலவிற்காகத் தொடர்ந்து நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து இளவரசன் அனுப்பிய பணத்தைப் பெற்றுக்கொண்ட மகேஸ்வரிக்கு, வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்த இளவரசன், மனைவியைக் கண்டித்துத் தன்னுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் மகேஸ்வரியை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும், தன் நடத்தையை மாற்றிக்கொள்ளாத மகேஸ்வரி, கணவர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து அனுப்பிய பணத்தைச் சுருட்டிக்கொண்டு தன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளான இளவரசன், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக, தன் வேதனைகளை விவரித்து சுமார் 7 நிமிடங்கள் ஓடக்கூடிய கண்ணீர் மல்கிய வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். “இனி ஒருத்தி எனக்கு வேண்டாம்…” என்று உருக்கமாகப் பேசிவிட்டு, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
