ஐதராபாத், குகட்பள்ளி பகுதியில் கணவரைக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். டிசம்பர் 23 அன்று சுதீர் ரெட்டி என்பவர் உயிரிழந்ததாக அவரது மனைவி பிரசன்னா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். தனது கணவர் கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அவர் தனது சகோதரியிடமும் போலீசாரிடமும் கூறி ஒரு தற்செயலான மரணம் என நம்பவைக்க முயன்றார்.
சுதீர் ரெட்டியின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், அவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் இறக்கவில்லை என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பிரசன்னா தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், சுதீர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரசன்னாவிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டுத் துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்றும் ஏற்பட்ட கடுமையான சண்டையில், கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதாக பிரசன்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.
