தன் கணவனின் உயிரற்ற மார்பில் தலை சாய்த்து, அந்த மனைவி கதறி அழுது கண்ணீர் வடித்தாள். ஆனால், இறுதியில் அவளே தன் கணவனின் கொலையாளி என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மசாலாப் பொருட்கள் வியாபாரம் செய்து வந்த தேவ் கிருஷ்ணா என்பவருக்கு, 28 வயதான பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. இவர்களது வாழ்க்கை போய்க்கொண்டிருந்த வேளையில், இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
முகமூடி அணிந்த 3 அல்லது 4 கொள்ளையர்கள் தங்களது வீட்டின் சுவரை ஏறிக் குதித்து உள்ளே நுழைந்து, தன் கணவனைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டதாக பிரியங்கா போலீசாரிடம் கூறி நாடகமாடினாள். கணவனை இழந்து தவிக்கும் ஒரு அப்பாவியாகக் காட்டிக்கொண்டு, காவல்துறையினரின் விசாரணையைத் திசைதிருப்ப அவள் கடுமையாக முயன்றாள்.
இருப்பினும், அவளது முன்னுக்குப் பின் முரணான பேச்சால் காவல்துறையினருக்கு அவள் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தியபோது, பிரியங்காவிற்கு கமலேஷ் என்ற நபருடன் கடந்த 9 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து அவளே திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டியது இறுதியில் அம்பலமானது.
