கர்நாடகாவில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால், தனது இரண்டாவது கணவரைத் திருட்டு வழக்கில் சிக்க வைத்துவிட்டு, காதலனுடன் பெண் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த மோனிகா என்ற பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு சாந்தன் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் பழக்கமுள்ள மோனிகாவிற்கு, ராகவேந்திரா என்ற காவலருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
காவலர் ராகவேந்திராவுடன் இணைந்து வாழத் திட்டமிட்ட மோனிகா, தனது கணவரைச் சட்டவிரோதச் செயலில் சிக்க வைக்கத் திட்டமிட்டார். இதற்காகத் தனது கணவர் சாந்தன் வீட்டில் கஞ்சா அல்லது திருட்டுப் பொருட்கள் இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்து அவரைச் சிக்க வைத்துள்ளார். கணவர் போலீஸ் விசாரணைக்குச் சென்ற இடைவெளியில், வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு மோனிகா தனது காதலன் ராகவேந்திராவுடன் தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட கணவர் சாந்தன் அளித்த புகாரின் பேரில், தற்போது போலீசார் மோனிகா மற்றும் காவலர் ராகவேந்திராவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
