அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான பிதான் ஹசாரிகா மற்றும் அவரது மனைவி ஜிந்தி. இவர்கள் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பிதானுக்குப் பல வடமாநிலப் பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தான் தொடர்பில் இருந்த பெண்களுடன் அவர் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்தும், பிதான் அந்தப் பெண்களுடனான தொடர்பைக் கைவிடவில்லை.
சம்பவத்தன்று ஜிந்தி வெளியே சென்றிருந்தபோது, பிதான் ஹசாரிகா வீட்டிற்கு இளம் பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த ஜிந்தி, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிதான், தனது மனைவி ஜிந்தியைச் சொந்த ஊரான அசாம் மாநிலத்திற்குச் சென்று விடுமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் கணவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்த ஜிந்தி, அன்று இரவு வேலை முடிந்து வந்து மது போதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது இருந்த கோபத்தில், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரது மர்ம உறுப்பை அறுத்து வீசியுள்ளார். பின்பு கணவரை அறையில் வைத்துப் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். அறையிலிருந்து வெளியே வர முடியாத அவர் கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துப் போலீஸார் ஜிந்தியைக் கைது செய்துள்ளார்கள்.
