மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு’ திடீரென அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள சூழலில், பாரசீக வளைகுடாவில் இருந்து இந்தப் போர்க்கப்பல் வெளியேறியிருப்பது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அறிகுறியா அல்லது கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமா என்ற விவாதம் எழுந்துள்ளது. சுமார் 10 மாதங்களாகக் கடல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்தக் கப்பல், தற்போது ஐரோப்பியக் கடல் எல்லைப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரான் முன்வைத்துள்ள அமைதி ஒப்பந்த நிபந்தனைகளில் தனக்கு உடன்பாடில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் போரை மீண்டும் தொடங்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். தற்போது இந்தப் போர்க்கப்பல் விலக்கப்பட்டாலும், இன்னும் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள் அந்தப் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் பொருளாதார முற்றுகை மற்றும் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தம் போன்ற காரணங்களால் உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையில் இன்னும் பதற்றமான சூழலே நீடிக்கிறது.
