கூட்டணி மாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் முத்தரசன் ஒரு குட்டிக்கதை மூலம் தற்போதைய அரசியல் சூழலை விமர்சித்துப் பேசியுள்ளார். ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது, ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என நினைத்து திடீரென ஒரு ஆடு அடுத்த கரைக்குச் செல்லும் என்றும், அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மற்ற ஆடுகளும் அங்கே போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சென்ற பிறகுதான், ‘இதற்கு அதுவே மேல்’ என்ற உண்மை அவர்களுக்குத் தெரியவரும் என்று முத்தரசன் கூறியுள்ளார். மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பிப் போனால், அந்த ஆற்றுப்படுகை தங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியாத நிலையில், “வந்துவிட்டோம் கொஞ்சம் நாள் இருப்போம்” என்று நினைப்பதுதான் இன்றைய அரசியல் சூழல் எனப் பொதுவாகக் கூறுவதாக அவர் விவரித்துள்ளார். இந்த குட்டிக்கதை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
