ஐயோ காப்பாத்துங்க… கதறிய கொரியப் பெண்… கண்டு கொள்ளாத ஆம்புலன்ஸ்… உ.பி- யில் அதிர்ச்சி… கொதிக்கும் நெட்டிசன்கள்…!

By Swetha on ஆடி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தின் கிழக்கு நுழைவாயில் அருகே தென்கொரியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் குரங்கால் தாக்கப்பட்டார். தனது கணவருடன் தாஜ்மஹாலைப் பார்வையிட வந்திருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த குரங்கு ஒன்று அவரது கையில் பலமாகக் கடித்ததில் அவருக்குக் கடுமையான காயமும் அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டது. வலியால் அலறிய அந்தப் பெண்ணை உள்ளூர் மக்கள் அருகில் உள்ள முதலுதவி மையத்திற்கு அழைத்துச் செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நடந்த உடனடியாக இந்தியத் தொல்லியல் துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸை வரவழைக்க முயற்சித்தனர். இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால், தாஜ்மகால் வளாகத்தில் உள்ள மையத்தில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மின்சார ரிக்‌ஷா மூலமாகவே அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த அலட்சியப் போக்கு குறித்து ஆக்ரா தலைமை மருத்துவ அதிகாரியிடம் தொல்லியல் துறை புகாரளித்துள்ளது.

   

மருத்துவ உதவி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் போதிய அவசரக்கால வசதிகள் இல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலத்தில் அடிப்படை முதலுதவி வசதி கூட தாமதமாவது நாட்டின் பாதுகாப்பைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் விமர்சித்துள்ளனர். மேலும், தாஜ்மஹால் பகுதியில் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.